×

தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவில் தடங்கல் ஏற்படுவது ஏன்?: பிரீமியம் தட்கல் முன்பதிவுக்காக திட்டமிட்ட குளறுபடியா

சென்னை: பாதுகாப்பு, கட்டணம் குறைவு, சொகுசான பயணம் உள்ளிட்ட காரணங்களால் பெரும்பாலும் தொலைதூர பயணிகளின் முதல் தேர்வாக இருப்பது ரயில் பயணமே. ஆனால், 3 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு தொடங்கி விடுவதால் குறிகிய காலத்தில் திட்டமிட்டு செல்பவர்கள் மற்றும் அவசர பயணம் மேற்கொள்பவர்களுக்கு ரயில் டிக்கெட் கிடைப்பதில்லை. அவர்கள் கடைசி முயற்சியாக தட்கல் முறையில் முன்பதிவை தேடி செல்கிறார்கள்.

இந்த தட்கல் முன்பதிவு ஒரு நாள் முன்பு நடைபெறுகிறது. அதுவும் காலை 10 மணிக்கு குளிசாதன வசதி கொண்ட பெட்டிக்கும், 11 மணிக்கு தூங்கும் வசதி கொண்ட பெட்டிக்கும் தொடங்குகிறது. ஆனால், முன்பதிவு தொடங்கிய ஓர் இரு நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிடும். IRCTC இணையத்தள பக்கத்தில் அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து கடைசி கட்டத்தை அடையும் போது சர்வர் முடங்கி விடுகிறது. அதே சமயம் அடுத்த சில நிமிடங்களிலேயே பிரீமியம் தட்கலில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடிகிறது.

இந்த பிரீமியம் தட்கல் என்பது இருமடங்கு கட்டணம் அதிகம். உதாரணமாக சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு தட்கல் கட்டணம் ரூ.600 மட்டுமே. ஆனால், பிரீமியம் தட்கலில் 1,000 ரூபாய். இதன்மூலம் ஒரு டிக்கெட்டுக்கு குறைந்தபட்சம் ரூ.500 முதல் ரூ.1,000 வரை ரயில்வேக்கு கூடுதல் வருவாய் கிடைக்கிறது. இதனால், தட்கல் முன்பதிவில் ரயில்வே நிர்வாகமே திட்டமிட்டு குளறுபடி செய்கிறதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஆனால், இந்த குற்றச்சட்டை மறுக்கும் ரயில்வே நிர்வாகம் ஒரே நேரத்தில் பலர் முயற்சிப்பதால் இணையதளம் முடங்கி விடுவதாக காரணம் கூறுகிறது. அப்படியெனில் பிரீமியம் தட்கலில் மட்டும் எப்படி தடையின்றி டிக்கெட் பதிவு செய்ய முடிகிறது என்றும் பயணிகள் கேள்வி எழுப்புகின்றனர். தட்கல் முன்பதிவு தொடங்கும் போது தடங்கல் இல்லாமல் சேவையை வழங்குவது தான் ரயில்வேயின் கடமை. இதனை இனி வரும் காலங்களில் ரயில்வே நிர்வாகம் முறையாக செயல்படுத்த வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

The post தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவில் தடங்கல் ஏற்படுவது ஏன்?: பிரீமியம் தட்கல் முன்பதிவுக்காக திட்டமிட்ட குளறுபடியா appeared first on Dinakaran.

Tags : Tadkal Train ,Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை – கன்னியாகுமரி அதிவிரைவு ரயிலுக்குள் மழைநீர்